சிலுக்குவின் வாழ்க்கை படமாகிறது


ழுபதுகளின் இறுதியில் வண்டிச்சக்கரம் படம் மூலமாக தமிழ்சினிமாவுக்கு வந்தார் சிலுக்கு. (சில்க் ஸ்மிதா) விஜயவாடா விஜயலஷ்மி என்ற பெயரை சினிமாவுக்காக சில்க்ஸ்மிதா என்று மாற்றி வைத்தவர் நடிகரும் கதாசிரியருமான வினுசக்கரவர்த்தி.
 

இவர்தான் சிலுக்கை சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியவர். 18 வயதிலேயே திருமணம் ஆன பிறகும் கூட வறுமையிலிருந்து மீள முடியாமல், தூரத்து உறவு அத்தையுடன் சினிமா ஆசையில் சென்னைக்கு வந்த சிலுக்கு பதினேழு ஆண்டுகள் தன் கவர்ச்சியால் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் திரையுலகை கட்டி ஆண்டார். 


அப்போதெல்லாம் திரைப்படங்களை வாங்க விநியோகஸ்தர்கள் ஒரு நிபந்தனை போடுவார்களாம் தயாரிப்பாளர்களுக்கு. அதாவது கண்டிப்பாக சிலுக்குவின் நடனம் அந்தப் படத்தில் இடம்பெற வேண்டுமென்று.

ஒருமுறை படப்பிடிப்பின் போது ஒரு ஆப்பிள் பழத்தை ஒரு கடி கடித்துவிட்டு தூக்கிப் போட்டாராம் சிலுக்கு. அந்தப் பழம் ஏலம் போனது என்பது எந்த நடிகைக்கும் கிடைக்காத பெருமை. இன்னமும் பல திரை கதாநாயகிகள் சிலுக்குவின் கண்களுக்கு யார் கண்களுமே ஈடு இணை கிடையாது என்று பேட்டி தருகிறார்கள்.

சிலுக்கு இல்லாத காரணத்தால் ரஜினி படத்தையே ஒரு முறை விநியோகிஸ்தர்கள் வாங்க மறுத்தார்கள். பின் சிலுக்குடன் ரஜினி ஆடும் ஒரு பாடலை இணைத்து வெளியிட்டுயிருக்கிறார்கள். சிலுக்கு தான் ஆசைப்பட்டு நடிக்க விரும்பியது பாக்கியராஜ் உடன். நடித்த படம், ரகசிய போலீஸ்.

சிலுக்கு கடைசி வரை யாரையுமே திருமணம் செய்து கொள்ளவில்லை. யாரையும் கிட்ட நெருங்க விடாமல் இருந்த சிலுக்கு தன் தூரத்து உறவினரான டாக்டர் ஒருவருடன் வாழ்ந்திருக்கிறார்.

சிலுக்கு தன் வாழ்நாளில் பலருக்கு உதவியாய் இருந்துள்ளார். சில நக்சலைட் ஆதரவாளர்களுக்கு ஆதரவாக இருந்துள்ளார்.
நக்சலைட் ஆட்கள் அக்கா என்று அழைக்கும் அளவிற்கு பழக்கம் இருந்திருக்கிறது. 


நடிக்கை வரவில்லையென்றால் நக்சலைட்
ஆகியிருப்பேன் என்றும் பேட்டி கொடுத்திருக்கிறார். நக்சலைட்டுடன் அவர் ஏன் தொடர்பு வைத்திருந்தார்.   அவருக்கு ஏன் நக்சலைட் மீது இத்தனை ஆர்வம்? என்ற கேள்விகளுக்கு இது வரை விடையில்லை.

திரையுலகில் நட்சத்திரமாக ஜொலித்த, ஆயிரக்கணக்கான ரசிகர்களை மகிழ்வித்த சிலுக்குவின் தனிப்பட்ட வாழ்க்கை மிக சோகமானது. 1996ஆம் ஆண்டு வடபழனியில் இருந்த தனது இல்லத்தில் தற்கொலை செய்துகொண்டு மாண்டுபோனார். திரையுலகமும், ரசிகர்களும் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.

சிலுக்குவின் திடீர் மரணத்தால் அவர் நடித்து வந்த பல திரைப்படங்கள் பாதித்தது.
சிலுக்கினால் பயனடைந்தவர்கள் பலர் என்றாலும் கடைசிவரை அவருக்கு நண்பர்களாய் இருந்தவர்கள் மனோரம்மா, லட்சுமி, வடிவுக்கரசி, வினு சக்கரவர்த்தி, முத்துராமன், கங்கை அமரன் போன்ற ஒரு சிலர் தான். அவரது இறுதி ஊர்வலத்திற்கு வந்தவர்களும் இவர்கள் மற்றும் ஒரு சிலர் தான்.

இப்படிப்பட்ட பேரலையும்,பெரும் சோகமும் நிறைந்த சிலுக்கின்  வாழ்க்கை  சினிமாவாகிறது.
இந்தி, தமிழில் ஏக்தாகபூர் இப்படத்தை தயாரிக்கிறார். மிலன்ருத்யா இயக்குகிறார். சிலுக்கு கேரக்டரில் நடிக்க வித்யாபாலனிடம் பேசி உள்ளனர். படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.