பிரகாஷ்ராஜ் மீண்டும் திருமணம்

மனைவி லலிதகுமாரியை சமீபத்தில் விவாகரத்து செய்த பிரபல நடிகர் பிரகாஷ்ராஜ், தனது நீண்ட நாள் காதலி போனி வர்மாவை திருமணம் செய்கிறார்.


தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்தியாவின் அனைத்து மொழிப் படங்களிலும் சிறந்த குணச்சித்திர - வில்லன் நடிகராகத் திகழ்பவர் பிரகாஷ்ராஜ். காஞ்சீபுரம் படம் மூலம் சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்றார்.

தமிழில் பல படங்களைத் தயாரித்துள்ளார். இப்போதும் தயாரித்துக் கொண்டுள்ளார்.

நடிகை டிஸ்கோ சாந்தியின் தங்கை லலிதாகுமாரியை 1994-ல் காதல் திருமணம் செய்து கொண்டார் பிரகாஷ் ராஜ். இருவருக்கும் இரு பெண் குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் பிரகாஷ்ராஜையும் பெண் டான்ஸ் மாஸ்டர் போனி வர்மாவையும் இணைத்து கிசுகிசுக்கள் வந்தன. இருவரும் நெருங்கி பழகுவதாகக் கூறப்பட்டது.

இதையடுத்து பிரகாஷ்ராஜுக்கும் லலிதாகுமாரிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. மனைவியிடம் இருந்து விவாகரத்து கோரி குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் பிரகாஷ்ராஜ்.

லலிதா குமாரியோ தன்னை கணவருடன் சேர்த்து வைக்குமாறு பதில் மனுதாக்கல் செய்தார். பின்னர் இருவரும் ஒருமனதாக பிரிய முடிவு செய்தனர். அவர்களுக்கு விவாகரத்து வழங்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து பிரகாஷ்ராஜ்-போனி வர்மாவும் ஒரே வீட்டில் தங்கி வசித்தனர்.

விரைவில் திருமணம் செய்து கொள்ளவும் முடிவு செய்துள்ளனர். திருமண ஏற்பாடுகள் ரகசியமாக நடப்பதாகக் கூறப்படுகிறது.