காரில் ஒலித்த பாட்டுக்கு ஏற்ப வாயசைத்தபடி கார் ஓட்டியதை, செல்போனில் பேசியதாக நினைத்து எனக்கு அபராதம் போட்டார்கள் போலீசார் என்றார் சமீரா ரெட்டி.
வாரணம் ஆயிரம், அசல் படங்களின் நாயகி சமீரா ரெட்டி. போகுமிடமெல்லாம் போலீசுடன் மோதும் ராசி இவருக்கு.
ஏற்கனவே மலேசியா போலீசாருடன் மோதியதில் லிப்டில் இருந்து வெளியில் தள்ளப்பட்டார் சமீரா. இப்போது மும்பை போலீசாருடனும் மோதியுள்ளார்.
போக்குவரத்து போலீசார் தன்னிடம் லஞ்சம் கேட்டதாக புகார் கூறியுள்ளார். இதுபற்றி நிருபர்களிடம் சமீரா கூறுகையில், "மும்பையில் இருந்து சாந்தா குரூஸ் விமான நிலையத்துக்கு காரில் சென்று கொண்டிருந்தேன். விமான நிலையம் அருகில் எனது காரை போக்குவரத்து போலீசார் வழிமறித்து நிறுத்தினர். நான் செல்போனில் பேசிக்கொண்டே கார் ஓட்டியதாக குற்றம் சுமத்தினர்.
ஆனால் உண்மையில் நான் செல்போனில் பேசவில்லை. செல்போனில் இருந்து வந்த பாட்டுக்கு ஏற்ப என் உதடுகளை அசைத்தேன். நான் பேசிக்கொண்டு வந்ததாக தப்பாக நினைத்து என்னைப் பிடித்து விட்டனர். அவர்களிடம் செல்போனில் பேசவில்லை என்று எவ்வளவு கெஞ்சியும் கேட்கவில்லை. வேறு வழியில்லாமல் அபராதத்தை கட்டி ரசீது வாங்கத் தயாரானேன்.
ஆனால் அதற்கும் அவர்கள் சம்மதிக்கவில்லை.
என்னிடம் லஞ்சம் வாங்குவதில் குறியாக இருந்தனர். அப்போது அந்த வழியாக சென்றவர்கள் நான் நடிகை என்பதை கண்டு பிடித்து எனக்காக போலீசாரிடம் வாதாட, அத்தோடு என்னை விட்டுவிட்டார்கள்...", என்றார்.
0 Response to "வாயசைத்தால் அபராதமா? சமிரா"
Post a Comment